தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை
ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய் விடவா என திமுக கவுன்சிலர் காட்டம்.;
தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் மண்டல குழு கூட்டம் மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மண்டல குழு கூட்டத்தில் பேச ஆரம்பித்த திமுக மாமன்ற உறுப்பினர் நரேஷ் கண்ணா பேசும் போது ஒரு லைட் கூட மாற்ற முடியல, ஏன் அதை கூட வழங்கமுடியாதா, என்ன பாவம் செய்தது அனகாபுத்தூர் என புலம்பி தீர்த்து விட்டார்.
அதற்கு பதிலளித்த மண்டல பொறியாளர் மாநகராட்சி ஆணையர் கையெழுத்து போடவில்லை அதனால் தான் பல்பு வழங்கவில்லை என பதிலளித்தார்.
அதன் பிறகு பெண் மாமன்ற உறுப்பினர் பேசுகையில் 6 மாதமாக ஒரு லைட் போட கூட முடியாத நிலையில் உள்ளோம், 2006ல் மாற்றப்பட்ட லைட்டெல்லாம் இன்னும் மாற்றப்படவில்லை, பொதுமக்கள் போன் மேல் போன் போட்டு கேட்கிறார்கள் என்று அவர் பங்குக்கு புலம்பி தள்ளினார்.
மீண்டும் பேசிய நரேஷ் கண்ணா 48 கோடி நிதி வருதுன்னு சொன்னீங்க எதுவும் வரவில்லை, என்ன நடைமுறையை பின்பற்றுகிறீர்களோ, இந்த மண்டலத்திற்கு மட்டும் என்ன விதி என்று தெரியவில்லை, முதலில் ஒரு மூன்று மீட்டிங்கில் கமிஷ்னர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.