பல்லாவரத்தில் சாலையில் தொங்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சம்
சென்னை அருகே, பல்லாவரம் ரேடியல் சாலையில் காற்றில் கிழிந்து தொங்கும் பேனரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.;
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை, போலீஸ் பூத் அருகில் சாலையோரம் அனுமதியின்றி, சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் மெகா சைசில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக, விளம்பர பேனர் கிழிந்து, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதனால், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், மிகுந்த அச்சத்தோடு பயணம் மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த 2019ம் வருடம், செப்டம்பர் மாதம் பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில், மீண்டும் ரேடியல் சாலையில் பேனர் வைக்கப்பட்டு காற்றில் தொங்கிக் கொண்டிருப்பது பலரது உயிரை பறிக்கும் வகையில் உள்ளது.
அதேபோல் ரேடியல் சாலை, ஜி.எஸ்.டி.சாலை, பள்ளிகரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், என பல்வேறு இடங்களிலும் இராட்சத விளம்பர பேனர்கள் உள்ளன. அதனை அகற்றி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.