சென்னை: நோயாளியாக நடித்து ரூ.70 கோடி போதைபொருள் கடத்தல்; 2 பெண்கள் கைது

நோயாளிகளாக நடித்து ரூ,70 கோடி போதை பொருள் கடத்திய 2 வெளிநாட்டு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-04 14:48 GMT

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம்  வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் தீவிரமாக கண்காணித்தனா். அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு வெளிநாட்டு பெண் தள்ளிக்கொண்டு வந்தாா். 

சந்தேகமடைந்த சுங்கத்துறையினா், அப்பெண்களை நிறுத்தி விசாரித்தனா். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாவே நாட்டை சோ்ந்தவா். அவா் இதய நோயாளி. அவா் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்துள்ளார் என்றும், சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமாா் 30 வயது பெண், தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சோ்ந்தவா். ஜிம்பாவே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளராக, அவரும் மருத்துவ விசாவில் வந்துள்ளதாக தெரிவித்தனா்.

அவர்கள் பதிலில் தெளிவு இல்லாததால், சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த டிராலி சூட்கேஸ், பைகளில் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.70 கோடி.

இதையடுத்து சுங்கத்துறையினா் இருவரையும் கைது செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனா். அதோடு இவா்கள் சென்னையில் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க கொண்டுவந்தனா் என்றும் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News