மதுராந்தகம் அமமுக நகர செயலாளர் நீக்கம்: பொறுப்பாளர்கள் அதிருப்தி
மதுராந்தகம் அமமுக நகர செயலாளரை முன்அறிவிப்பின்றி கட்சியில் இருந்து நீக்கியதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுராந்தகம் நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் அமமுக சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு பேரவை மற்றும் பாசறையில் பொறுப்பு வகித்து வருகின்றனர்,
இந்நிலையில் கடந்தமாதம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோதண்டபாணி முன்னிலையில் திருப்போரூரில் நடைபெற்ற நகர ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில், அமமுக தொண்டர்களை அக்கட்சியிலிருந்து அனைவரும் விலக்கி மாற்றுக் கட்சியில் இணைவோம் என கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை மறுத்த மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன் தனது ஆதரவாளர்களும் தன்னை சார்ந்த அமமுக தொண்டர்களும் எப்பொழுதும் கழகத்தை விட்டு நீங்க மாட்டோம் என மாவட்ட செயலாளர் கோதண்டபாணியிடம் தெரிவித்துள்ளார், ஆனால் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்ட மாவட்ட செயலாளர் கோதண்டபாணி தொடர்ந்து சரவணன் மீது தலைமைக் கழகத்துக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழகத்திற்காக பாடுபடுவேன் என தெரிவித்த நகர செயலாளர், தொடர்ந்து தொடர் மழையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து மூன்று கட்டங்களாக வெள்ள நிவாரண நல உதவிகளை வழங்கியுள்ளார். இந்த நல உதவிகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட மாவட்ட செயலாளர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மதுராந்தகம் நகர செயலாளர் சரவணன் அக்கட்சியிலிருந்து நீக்கியதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் மூலம் அறிவிப்பு தெரிந்த கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிருப்திக்கு உள்ளாகினர், ஆகவே நகர செயலாளர் நீக்கம் குறித்து தலைமை கழகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்தகம் கழகப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.