5 மாதத்திற்குப்பின் வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு: கட்டுப்பாடுகளுடன் அனுமதி

5 மாதங்களுக்கு பின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2021-09-14 06:31 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் வருவதால், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்கும்.

பறவைகள் ஏரியில் உள்ள மரங்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளுடன் மீண்டும் தாய்நாடு திரும்பும். பறவைகளைக் கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

கொரோனா அச்சத்தால் கடந்த ஏப்ரல் மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது. பின்னர், தமிழகஅரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை வழங்கியது. எனினும், பறவைகள் சரணாலயத்தை திறக்க அனுமதிக்கவில்லை. பருவமழைக்கால தொடக்கத்தில் இந்த ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்தன. கடந்த சில தினங்களாக பெய்த மழையால், ஏரியில் சிறிது கொள்ளளவு தண்ணீர் எட்டியது. இதையடுத்து பறவைகள் ஏரிக்கு வரத்துவங்கியுள்ளன.

இந்நிலையில், பறவைகள் சரணாலயத்தில் தங்கியுள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக இன்று முதல் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் மீளும் என உள்ளூர் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைளை பின்பற்றி சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தின் உள்ளே ஒரு மணிநேரத்துக்கு குறைந்த அளவு பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர். ஏற்கெனவே உள்ளே சென்று வெளியேறுபவர்களின் எண்ணிக்கையை கண்காணித்து மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். மக்கள் முகக் கவசம் அணிந்து, கைகளை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். என தெரிவித்தனர்.

Tags:    

Similar News