மதுராந்தகம்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆய்வு நடத்தினார்.;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அரவிந்தன் இன்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடையே அவர் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் பதற்றமான 5 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் வன்னியர்பேட்டையில் உள்ள 3 வாக்குச்சாவடிகளும், அதேபோல் காந்திநகர் மற்றும் மோச்சேரி பகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடியும் மிகவும் பதட்டமானவை ஆகும். பொதுமக்கள் பதற்றமடையாமல் வாக்களிக்க அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்கு மையங்கள் கண்டறியப்பட்டு, மக்கள் எந்தவித அச்சம் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராவும் பொருத்தி, அனைத்து நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மீது, இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.