மதுராந்தகம்: கோழிப்பண்ணையில் 115 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
மதுராந்தகம் அருகே, கோழிப்பண்ணையில் தீவனத்துக்காக வைத்திருந்த 115 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசி கொதிக்க வைத்து, கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கமாக செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு, ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில், ஏ.டி.ஜி.பி பாஸ்குமார் உத்தரவின்பேரில் அங்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார், கோழி பண்ணையில் சோதனை செய்தனர்.
இச்சோதனையில், கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5750 கிலோ அதாவது, 50 கிலோ எடை கொண்ட 115 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான, மதுராந்தகம் அப்துல்சமத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.