பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் கம்பெனி புகையால் பொதுமக்கள் அவதி
பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பேர்கண்டிகை, கடமளைபுத்தூர் இணைப்பு சாலையின் ஊராட்சி குடியிருப்பு மத்தியில் தனியாருக்கு சொந்தமான தார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
குறிப்பாக இந்த தார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் அங்கு வசிக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் தார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் இயற்கை வளங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மூலிகை மரங்கள் கருகி வருகின்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் முன்வந்து குடியிருப்பு மத்தியில் அமைந்திருக்கும் தார் தொழிற்சாலையை ஆய்வுசெய்து நிரந்தரமாக மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் முன்வந்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.