செங்கல்பட்டில் காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வங்க முடியாமல் தவிக்கும் மக்கள்
செங்கல்பட்டுட்டில் காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழகத்தில் மொத்தம் 36 பழங்குடிச் சமூகத்தவர்கள் உள்ளனர். இவர்களில் தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தாரும் 'தொன்மைப் பழங்குடி குழுக்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் குடி மதிப்பீட்டின்படி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டுநாயக்கர்கள், மன்னர்கள் காலத்தில், மலை மற்றும் காட்டுப் பகுதியிலிருந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் மற்றும் பறவைகளைப் பிடிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள்.
இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக 15,000-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள்.
விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் பன்றிகள் மேய்த்தும், குறி சொல்லியும், ஊசி, பாசி மணிகள் விற்றும் தங்களின் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர்.
கூலி வேலைக்கு செல்ல முனைந்தால் கூட சாதி காரணம் காட்டி, இதர சமுதாய மக்கள் வேலை கொடுப்பது குதிரை கொம்பான சங்கதிதான்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும், கல்வியறிவில் கடைநிலையிலும் வாழும் காட்டு நாயக்கர் சமுதாயத்தில், 12-ம் வகுப்பை தாண்டியவர்களை தமிழக அளவில் விரல் விட்டு எண்ணிவிட முடியும்.அரசு ஆணைப்படி பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாயத்தினர்,
தற்போது சமூகத்தில் தாங்களும் உயர, தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவும், வேலை வாய்ப்பினைப் பெறவும் சாதிச் சான்று ஒரு தடைக்கல்லாக இருக்கிறது.
காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதிச் சான்றில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள 'இந்து காட்டுநாயக்கர்' என்ற சாதிப் பெயருடன் எஸ்.டி சான்று வழங்கினால் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகளைப் பெற முடியும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்து காட்டுநாயக்கர் (எஸ்.டி) என்று சான்று வழங்கி பழங்குடியினருக்கான பட்டியலில் உறுதி செய்து சான்றளித்துள்ளனர்.
ஆனால் செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்கள், வட்டாச்சியாளர்கள், தொடர்ந்து காட்டுநாயக்கர் என்று சாதிச் சான்று தர மறுத்து, வேறு சாதிகளில் சான்றும் வழங்கியுள்ளார்கள்.
இதற்கு ஆட்சியாளர்கள் புரிதல் இன்றி சொல்லும் ஒரே காரணம் மலையும், மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தால் மட்டுமே பழங்குடியினர் மற்றும் காட்டுநாயக்கர் என்று எஸ்.டி பட்டியலில் வழங்க முடியும் என்று காரணம் கூறுகிறார்கள்.
இதனால் பழங்குடி சமுதாயமான காட்டுநாயக்கர் சமுதாயம் தனக்கான எந்தச் சலுகையையும் கிடைக்கப் பெறாமல், சாதிச் சான்றிதழ்களைப் பெற அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து காட்டுநாயக்கன் மக்கள் கூறும்போது, "எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலேயே 'காட்டுநாயக்கர்களையும், நரிக்குறவர்களையும் பழங்குடியினராக அறிவித்து,
அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டும்' என்பதெல்லாம் ஏட்டளவில் தான் உள்ளது. காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தான் சாதிச்சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர ஆதிக்க சாதி மக்களுடன் அவர்களால் போட்டி போட முடியாது. இவர்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதிச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். காட்டுநாயக்கர் சமுதாயமும் முன்னேற்றம் அடையும்.
கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலே இங்கே இருக்கோம். பல காலமா தாசில்தார் ஆபிசுக்கும், மாவட்ட ஆட்சியர் ஆபிசுக்கும் நடையா நடந்துப் பார்த்துட்டோம் எதும் நடக்கல.
வேற ஒருசில மாவட்டங்களில் இருக்கும் எங்க சாதி சனத்துக்கு இந்து காட்டுநாயக்கர்ன்னு சாதி சான்றிதழ் கொடுத்து இருக்காங்க. அவங்கள் குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடம் போய் நல்லா படிக்குதுங்க. எங்கள் புள்ளைங்க எங்களைப் போல பன்னிதான் மேய்க்கனுமா சாமி? அவங்களாவது படிக்கக் கூடாதா? குழந்தைகள் யாரும் 10 வகுப்பை தாண்டி 12வது போகல.
பன்னிதான் மேய்க்குதுங்க. நாங்க காசு, பணம் கேட்கல சாமி. சாதி சான்றிதழ் கொடுத்தால் போதும், எங்க புள்ளைங்க படிச்சுக்கும்" என கண்ணீருடன் கூறுகின்றனர்.
எனவே அவர்களுக்கு உரிய முறையில் பழங்குடியினர் (எஸ்.டி) என்று சான்றிதழை வழங்கிடுமாறு தமிழக முதல்வர் உத்திரவிட்டால் சமுதாயத்தின் விளிம்பு நிலையிலிருந்து உயர காட்டுநாயக்கர் சமுதாயத்தினருக்கும் வழிவகை பிறக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.