மின்மாற்றியை மாற்ற பணம் கேட்கும் அதிகாரிகள்; விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுராந்தகம் அருகே 15 நாட்களுக்கு முன் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.;

Update: 2021-07-21 04:45 GMT

பழுதாகிய மின்மாற்றி ஊழியர்களால் கழற்றி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக பழுதாகிய மின்மாற்றியை மாற்றி பொருத்தாமல் அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர். மேலும் மின்மாற்றி மாற்ற அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் சரமரியாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

மாரிபுத்தூர் கிராமத்தில்  கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் பழுதான மின்மாற்றியை சரி செய்வதற்காக மின்வாரிய துறையினர் கழற்றி எடுத்துச் சென்றனர். ஆனால், இதுவரை அதனை பொருத்தாமல் அலைகழித்து வருவதால், நெற்பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த மின்மாற்றியை நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆண்டு விவசாயிகள் நடவு செய்தனர். தற்போது மழை காலம் இல்லாததால் கிணற்று நீரை மின் மோட்டார் மூலம் நீர்ப்பாய்ச்சி வந்தனர். ஆனால், தற்போது, மின் மாற்றி பழுதானதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் நெற்பயிர்கள் கருகாமல் இருந்துவருகிறது. இன்னும் சில தினங்களில் மின்மாற்றி மாற்றவில்லை என்றால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்படும். 

தற்போது மின்மாற்றி பழுதால் அருகில் இருந்த இன்னொரு மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்குவதால்  மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. மின்விசிறி, விளக்குகள் சரிவர மின்சாரம் கிடைக்காமல் இருளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்மாற்றி பொருத்துவதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடம் பணம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே உடனடியாக மின் மாற்றியை மின்சார துறையினர்  புதிய மின்மாற்றியை பொருத்தி நெற்பயிர்கள் கருகாமல் காக்கவும் மின் பற்றாக்குறையை போக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News