மணல் கடத்தலைத் தடுக்க சென்ற போலீசாரை டிராக்டர் ஏற்றி கொள்ள முயற்சி: திமுக பிரமுகர் கைது
மதுராந்தகம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க சென்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொள்ள முயற்சி செய்த திமுக பிரமுகர் கைது..!!
மதுராந்தகம் அருகே மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள ஓரத்தி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் மணல் அள்ளுவதாக ஒரத்தி காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒரத்தி போலீசார் ஆற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதை கண்டு அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த வடமணிபாக்கம் பகுதி திமுக கிளைச் செயலாளர் வடிவேலு என்பவர் போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்ச்சித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.
மேலும் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியோடிய திமுக கிளைச்செயலாளர் வடிவேலுவை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் மதுராந்தகம் அருகே பதுங்கி இருந்த வடிவேலுவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக கிளைச் செயலாளர் வடிவேலு ஒரத்தி அருகே 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்ஸோ சட்டததின் கீழ் கைது செய்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.