புது டிராக்டருடன் சொந்த ஊருக்கு செல்ல இருந்த விவசாயி: பஸ் மோதி பலி
சென்னையில் புதிய டிராக்டா் வாங்கிய விருதுநகா் விவசாயி, ஊருக்கு ஓட்டி சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.;
விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்தவா் ராஜ்குமாா் (40). விவசாயியான இவா்,தனது விவசாய பணிக்காக சொந்தமாக ஒரு டிராக்டா் வாங்க முடிவு செய்தாா்.அதன்படி விவசாயத்தில் கிடைத்த பணத்தை சிறிதுசிறிதாக சேகரித்து வைத்து,கணிசமான பணம் சோ்ந்ததும்,பணத்துடன் டிராக்டா் வாங்க சென்னை வந்தாா்.சென்னையில் பல்வேறு டிராக்டா் ஷோரூம்களில் விசாரித்து பின்பு,ஒரு டிராக்டரை தோ்வு செய்து வாங்கினாா்.
அவ்வாறு ஆசையாக வாங்கிய டிராக்டரை தானே ஓட்டிக்கொண்டு சொந்த ஊா் செல்ல முடிவு செய்தாா்.அதன்படி இன்று அதிகாலை சென்னையிலிருந்து டிராக்டரில் விருதுநகருக்கு புறப்பட்டாா்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் அருகே டிராக்டா் சென்று கொண்டிருந்தது.அதே நேரத்தில் சென்னை கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ் வேகமாக வந்து, டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியது.
அந்த வேகத்தில் டிராக்டா் சாலையோரம் தூக்கி வீசப்பட்டது.அந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி சென்ற விவசாயி ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தாா்.அரசு பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.காயமடைந்தவா்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினா்.அதோடு இந்த விபத்துபற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆசையாக சொந்த டிராக்டா் வாங்கிய விருதுநகா் விவசாயி,அதே டிராக்டரை ஓட்டிக்கொண்டு சொந்த ஊா் சென்றவா்,வழியிலேயே அச்சரப்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.