செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த திருபெரும்பேர்கண்டிகை ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் மாசி கிருத்திகை 101 ஆம் ஆண்டு பால்குடம் காவடி உற்சவம் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கத்தை அடுத்த திருபெரும்பேர்கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயம் மிகப்பழைமை வாய்ந்த ஸ்தலங்களில் ஒன்றாகும். அருணகிரிநாதரால் பாடல்பெற்ற திருபெரும்பேர்கண்டிகை கிரியின் மேல் ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகராகிய ஸ்ரீமத் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஆறுமுக சுவாமிக்கு மாசி மாத கிருத்திகை பால்குடம் காவடி உற்சவத்தை மரபினர்கள் வருடம் தோறும் நடத்தி வருகின்றனர்.
இவ்விழாவில் காலை காவடி அபிஷேகம் , தொடர்ந்து 108 பால்குட அபிஷேகம், மகா அபிஷேகம், ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பெரும்பேர் கண்டிகை விஸ்வகர்ம மரபினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.