ஒரே நாளில் தார்சாலை சேதம்- பொதுமக்கள் புகார்

Update: 2021-01-21 12:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள முருகம்பாக்கம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகத்திலிருந்து முருகம்பாக்கம் வழியாக செல்லும் தார் சாலை கடந்த 20ஆண்டுகளாக சேதமாக இருந்ததால் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை மிகவும் தரமற்ற முறையில் உள்ளதாகவும், சிறிய குச்சியைக் கொண்டு சாலையைக் கிளறினால் கூட தார்க்கலவை கையோடு பெயர்ந்து வரும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தரமான சாலை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இப்பகுதியில் கடந்த நான்காண்டு காலத்திற்குள் மட்டும் 5 முறை சாலை அமைக்கப்பட்டு ஐந்து முறையுமே இது போல தரமற்ற சாலையாகவே அமைந்ததாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தின் அருகாமையில் ரூ.43 லட்சத்தில் மற்றொரு புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது, எனவே முன்கூட்டியே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News