இருளர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்: மக்கள் வேதனை
இருளர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அருகே உள்ள விட்டிலாபுரம் கிராமத்தில் இருளர் மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று முந்தினம் ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த சுமார் 70 குடும்பங்கள் நூற்றாண்டுகாலமாக ஏரிக்கரையில் வசித்து வருகின்றனர், கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் அருகில் உள்ள விட்டிலாபுரம் ஏரியில் வெள்ளநீர் நிரம்பியும் இருளர் குடியிருப்பில் வெள்ள நீர் புகுந்ததால், குடிசை வீடுகளின் சுற்றுச் சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து சேதமானது.
மேலும், அங்குள்ள மற்ற வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாள்வரையில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சாரம், குடிநீர், குடும்ப அட்டை எதுவும் வழங்கப்படவில்லை,
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் படிப்பதற்கு சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பாதை இல்லை. என வேதனை தெரிவித்த மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாதை அமைத்துத்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.