செய்யூர் அருகே மீண்டும் கல்குவாரி லாரி மோதி ஒரு இளைஞர் பலி
செய்யூர் பகுதியில் இரு நாட்களில், கல்குவாரி லாரிகளால் இருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரண்டு நாட்களில், கல்குவாரி லாரிகள் மோதி, அடுத்தடுத்து இருவர் பலியான சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்மணி, இரு தினங்களுக்கு முன்னதாக, கல்குவாரி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இன்று செய்யூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அதேபோன்ற ஒரு விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்னாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (26) என்பவர், நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இன்று ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை, தனது இருசக்கர வாகனத்தில், பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த கல்குவாரி லாரி ஒன்று லோகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதனை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு நாட்களில், தொடர்ந்து கல்குவாரி லாரிகளால் இருவர் உயிரிழந்த சம்பவம், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.