நிலா கமிட்டியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
பத்திர பதிவை தடை செய்ய நிலா கமிட்டியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்;
கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் பத்திரப்பதிவு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இன்று காலை முதல் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 5 கி.மீ., சுற்றளவில் வரும் மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமப்பகுதிகளை நிலா கமிட்டி வரையறை செய்துள்ளது. மேலும், பேரிடர் மற்றும் அவசரகாலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், வரையறுக்கப்பட்ட எல்லையில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி உறுப்பினர் செயலாளர் அரசாணை வெளியிட்டார்.
இது குறித்த தகவல்கள் பரவியதை தொடர்ந்து, நிலா கமிட்டியின் உத்தரவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமல்லபுரம், புதுப்பட்டினம், அணுபுரம், கல்பாக்கம் நகரியப்பகுதி உள்பட பாதிக்கப்பட்ட 14 கிராமங்களில் குடியிருப்புகளில் இன்று காலை முதல் கருப்புக்கொடி ஏற்றி அக்கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், அணுமின் நிலைய நிர்வாக வட்டார கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது