மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் தங்கி இருந்த வெளிநாட்டு முதியவர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். கொல்கத்தாவை சேர்ந்தவர் லியோனி டீ குரூஷ் (90), இவர் இங்கிலாந்து நாடு, லண்டனில் வசித்துக் கொண்டு, அங்குள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா வந்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா என இரு நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள தனது நிலத்தை விற்பனை செய்வதற்காக மாமல்லபுரம் வந்த அவர் கோவளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் லியோனி டீ குரூசுக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். லியோனி டீ குருஷின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மூலம் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.