Ayodhya Ram Temple- அயோத்தி ராமர் கோயில் பிரகாரத்தில் பொருத்த, நாமக்கல்லில் 1,200 கிலோ ஆலயமணிகள் தயாரிப்பு
Ayodhya Ram Temple- அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில் பொருத்துவதற்காக, 1,200 கிலோ எடையில் ஆலய மணிகள், நாமக்கல்லில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Ayodhya Ram Temple, Temple Bells- உத்தரப் பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில், பைசாபாத் நகரில் இருந்து, 7 கி.மீ., தொலைவிலும், லக்னோவில் இருந்து, 136 கி.மீ., தொலைவிலும், சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அயோத்தியில், கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக ராமர் பிறந்தார் என, ராமாயணத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதி ‘ராம ஜென்ம பூமி’ என அழைக்கப்படுகிறது. சரயு ஆற்றின் கரையில் உள்ள முக்தி தரும், 7 இந்து புனித நகரங்களில், ராம ஜென்ம பூமியும் ஒன்று. இங்கு குழந்தை ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
வரும், 2024, ஜன., 22ல், இந்த கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இது, நாடு முழுவதும் கொண்டாடக்கூடிய விழாவாக மாறி வருகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்காக, ஆலயமணி தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர், நாமக்கல் முல்லை நகரில் உள்ள ‘ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து, நாமக்கல்லில் ஆலயமணிகள் தயாரிக்கப்பட்டு, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, ஸ்தபதிகள் ராஜேந்திரன், காளிதாஸ் ஆகியோர் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில், 108 ஆலய மணிகள் அமைக்க முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆலய மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயமணிகள், காப்பர், வெள்ளியம், துத்தநாதம் ஆகிய மூன்று உலோகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவும், பகலும் என, ஒரு மாதத்தில் இந்த ஆலய மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணியில், 20 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தலா 120 கிலோவில் 5 மணிகள், 70 கிலோவில் 6 மணிகள், 25 கிலோவில், ஒன்று மற்றும் 36 பூஜை மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த ஆலயமணிகள், கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முன்னதாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மணிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்காக ஆலயமணி தயாரிக்கும் பணி எங்களுக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.