பென்னிகுயிக் கிற்கு நேர்ந்த அவலம் ஐந்து மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்பு

இங்கிலாந்து கேம்பர்லி நகரில் கர்னல் பென்னிகுயிக்கிற்கு நேர்ந்த அவலத்தை கண்டு விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

Update: 2023-06-24 15:30 GMT

இங்கிலாந்தில் பென்னிக்குயிக் சிலையுடன் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான தமிழக குழுவினர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய மாமனிதர் கர்னல் பென்னிகுயிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை,  சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்ட மக்கள் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். அவர் மறைந்து ஒரு நூற்றாண்டு கடந்தும், இன்னமும் அவர் நினைவு ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டே வருகிறது.

அந்த மாமனிதருக்கு இங்கிலாந்து நாட்டில் அவர் பிறந்த ஊரான கேம்பர்லி நகரத்தில் உள்ள மைய பூங்காவில் மார்பளவு சிலை அமைத்து கௌரவிப்போம் என்று கடந்த 2023 ஜனவரி 18 -ஆம் தேதி அறிவித்தார் தமிழ்நாடு முதல்வர். ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி நகர தமிழ் சங்கம் முயற்சி எடுத்து வந்த நிலையில், அரசும் சேர்ந்து கொண்டதால் வேலை எளிதானது. 2022 செப்டம்பர் 10 -ஆம் தேதி சிலை திறப்பு விழாவிற்கான நாளும் குறிக்கப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமானது. லண்டன் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் எல்லாம் சிலை திறப்பு குறித்தான விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி தலைமையில் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் லண்டன் சென்று சேர்ந்த நிலையில், சிலை திறப்புக்கு ஒரு நாள் முன்னதாக இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டார்.

மறைந்தது நாட்டின் ராணி என்பதால் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆனாலும் வேறு வழியின்றி பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் மிக எளிய முறையில் அய்யாவின் சிலையை கேம்பர்லி நகரத்தில் உள்ள மையப் பூங்காவில் திறந்து வைத்தார் அமைச்சர் ஐ. பெரியசாமி.

இந்நிலையில் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கர்னல் பென்னிகுவிக் சிலையை சுற்றி மூடப்பட்டிருந்த துணி அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறினார். அப்போது தான் பென்னிகுயிக் சிலை மூடப்பட்டுள்ளது என்பதை அறிந்து விவசாயிகள் அதிர்ந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அரசு முழு விவரத்தை அறிந்து, நடவடிக்கை எடுத்து, இந்த சபைக்கு அறிவிக்க வேண்டியதை முறையாக அறிவிப்போம் என்று முழங்கினார்.

ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை என்பதை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் லண்டன் பயணம் உறுதி செய்திருக்கிறது. கேம்பர்லி நகர மைய பூங்காவில் அரசு சார்பில், மாமனிதர் பென்னிகுயிக்கு சிலை அமைப்பதற்கு, இங்கிலாந்தில் உள்ள தமிழ் சங்கங்களால் முயற்சி எடுக்கப்பட்டு, இங்கிலாந்து நாட்டு சட்டப்படி செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் ஒப்புதலை பெற்றுள்ளார்கள் என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்நாடு முதல்வர் க;றியத பொய் என தெரியவருகிறது.

கையாலாகாத தமிழக அரசு கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு ஏற்படுத்திய களங்கத்தை போக்கவும், செயின்ட் பீட்டர் தேவாலய நிர்வாகத்திடம் கலந்து பேசி, ஜான் பென்னிகுவிக் அவர்களின் மார்பளவு சிலையை மீண்டும் திறக்க வரும் 24 -ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் வருகிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை என்று அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அப்படியானால் அட்லான் நிறுவன புகாரின் அடிப்படையில், கேம்பர்லி நகர மைய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் திருவுருவச் சிலையின் தற்போதைய நிலை என்ன என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் கூற்றுப்படி, கர்னலின் சிலையை சுற்றி மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு விட்டதாக விவசாயிகள் நம்பி இருந்த நிலையில், அண்ணாமலை எதற்காக செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் செல்கிறார் என்று நமக்கு தெரிய வேண்டும். கூடுதலாக அவர்களுடன் கலந்து பேசி மறுபடியும் மார்பளவு சிலையை திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது அண்ணாமலை அவர்களின் twitter பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 24 ஆம் தேதி லண்டனில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும், 25 -ஆம் தேதி பர்மிங்ஹாம் செல்ல இருப்பதாகவும் அவரே அதை உறுதி செய்திருக்கிறார்.

மாமனிதர் கர்ணன் பென்னிகுயிக்கிற்கு அவர் பிறந்த ஊரில் இந்த அவல நிலையை ஏற்படுத்தியது யார் என்கிற முறையான விசாரணையை அரசு நடத்த வேண்டும். எதற்கெல்லாமோ தண்ணீராக பணத்தை செலவழிக்கும் நாம் கிட்டத்தட்ட 2 லட்சத்து 19 ஆயிரத்து 840.81 ஏக்கர் பாசன வசதி பெறுவதற்கும், ஐந்து மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி பேரின் குடிநீர் ஆதாரத்தையும் உத்திரவாதப்படுத்தி கொடுத்த ஒரு மனிதருக்கு, ஒரு கைமாறு சட்டப்படி செய்து விட்டால் தான் என்ன...? இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News