அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இளைஞர் திறன் திருவிழா
அரியலூர் மாவட்டத்தில் முதலாவது இளைஞர் திறன் திருவிழா ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது
அரியலூர் மாவட்டத்தில் இளைஞர் திறன் திருவிழா மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை பற்றி அறிந்துகொள்ளவும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெறவும் இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் பயிற்சி அளிக்கும் அரசுத் துறைகளையும், தனியார் நிறுவனங் களையும் ஒருங்கிணைத்து தமிழகத்திலுள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்றைய தினம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதலாவது இளைஞர் திறன் திருவிழா ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில் படித்து வேலையில்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் தங்களது திறமையின் அடிப்படையில், அவர்களது கல்வி தகுதியின் அடிப்படையிலும் பயிற்சியினை தேர்வு செய்து, சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக்கொள்ளவும், பயிற்சி பெற்றவர்கள் அதே நிறுவனம் அல்லது அந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றிடவும் இந்த இளைஞர் திறன் திருவிழா உறுதுணையாக இருக்கும்.
இந்த இளைஞர் திறன் திருவிழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகம், ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய பல்வேறு துறைகளின் சார்பில் தங்கள் துறை சார்ந்த திறன் பயிற்சிகள் குறித்து வேலை நாடுநர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு 38-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த திறன் பயிற்சிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். திறன் பயிற்சிக்கு பிறகு வேலை வாய்ப்புடன், நல்ல ஊதியம் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் எஸ்.சுமதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் செல்வம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.