குலதெய்வ வழிபாடு செய்த தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர்
தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைதூதர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன் கோடாலிகருப்பூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் வழிபாடு
தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன் தமிழ்நாட்டின் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவர் இலங்கையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந் தேதி சென்னையிலுள்ள துணை தூதர் அலுவலகத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தனது சொந்த பயணமாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலான அங்காள பரமேஸ்வரி கோவிலில் தனது மனைவியுடன் வந்திருந்து குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் சுமார் 1 மணி நேரம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்ட அவர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியான ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி போலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து அரியலூர் மாவட்ட போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கி கோவில் வழிபாடுகள் முடிந்தவுடன் மீண்டும் பெரியாத்து குறிச்சி சோதனைச்சாவடி வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.