அரியலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யாததால் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அரியலூர் மாவட்டம், இருகையூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.