அரியலூரில் திருமாவளவன் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தரங்கு
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த“சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை" கருத்தரங்கில் திருமாவளவன் பங்கேற்றார்.;
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிச் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. வரும் காலங்களில் இதுபோன்று சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
சசிகலா செயல்பாடு அ.தி.மு.க. தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பொது மக்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக இருக்கிறேன். மழை வெள்ளத்தின் போது எதிர்க் கட்சியாக உள்ள அ.தி.மு.க. செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஆட்சியை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். இவ்வகையான முரண்பாடுகளை களைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.