பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது
பல்வேறு பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த யேசுராஜ் என தெரிய வந்தது;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி கடைவீதியில் உள்ள, தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் புகுந்து குத்துவிளக்கு, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர் திருடிச் சென்றார். இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதேபோல், மீன்சுருட்டி பகுதியில் உள்ள 3 கோவில்களின் உண்டியல்களிலும் திருடு போயிருந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி தலைமையில், குற்றப்பிரிவு உதலி ஆய்வாளர் பழனிவேல் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து, பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மீன்சுருட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்த போலீசார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த யேசுராஜ் என்பதும், பல்வேறு பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.