வரதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
அரியலூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. வரம் தரும் வரதன் எனும்படி எழுந்தருளியிருக்கும் வரதராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் சித்திரை மாதம் 26 ஆம் நாள் தொடங்கி சித்திரை மாதம் 29ஆம் தேதி நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சித்திரை 30ஆம் தேதியான இன்று திருத்தேர் புறப்பாடு தீர்த்தவாரி திருமஞ்சனம் விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம்பிடித்து வீதிகளில் இழுத்துச் சென்றனர். வீதிகளில் மின் ஒயர்கள் குறுக்கே செல்வதால் மின்சாரமானது சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மின் ஊழியர்களால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு வழக்கம் போல் மின்சாரம் வழங்கப்பட்டது.