அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
ஜெயங்கொண்டத்தில் அதிகாலை வெடி சத்தத்துடன் திடீரென பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தினசரி பார்சல் ஏற்றிக்கொண்டு வரும் மகாலட்சுமி என்ற பார்சல் லாரி வழக்கம்போல் நேற்று இரவு மளிகை, ஜவுளி, மருந்து பொருட்கள், ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் பட்டாசு போன்ற வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. லாரியை திருச்சி கீரைக்காரத் தெருவை சேர்ந்த சபரி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியிலிருந்து பொருட்களை இறக்கிவிட்டு, இரவு நேரம் என்பதால் அண்ணா சிலை அருகே நிறுத்தியுள்ளனர். இரவில் டிரைவர் சபரி மற்றும் லோடு மேன்கள், அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயக்குமார், பகவதி, இளங்கோவன், மணிகண்டன் உட்பட அனைவரும் லாரியிலேயே படுத்து தூங்கி விட்டனர்.
இந்நிலையில், அதிகாலை லாரி திடீரென்று வெடிசத்தத்துடன் தீப்பிடித்து என எரியத் தொடங்கியுள்ளது. அப்போது லாரியில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, அருகில் உள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். லாரி எரிவது குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் தீயில் சிக்கித் தவித்த 5 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் மணிகண்டனை தவிர டிரைவர் சபரி மற்றும் லோடு மேன்கள் விஜயகுமார், பகவதி, இளங்கோவன் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து, முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேமடைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும் லாரி எப்படி திடீரென தீப்பற்றி எரிந்தது எனவும், அதில் வெடிபொருட்கள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.