ஜெயங்கொண்டம் அருகே யூகலிப்டஸ் மரத்தோப்பில் தீ
ஜெயங்கொண்டம் அருகே, யூகலிப்டஸ் மரத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், மரங்கள் எரிந்து சாம்பலாயின.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்திற்கு உட்பட்ட பெரியவளையம் வனப்பகுதி எதிரே, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் யூகலிப்ட்ஸ் (ஆர்எஸ்பதி) தோப்பு உள்ளது. அங்கு, திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனை, அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
ஆர்எஸ்பதி தோப்பில் காய்ந்த சருகுகள் சில வெட்டப்பட்ட மரங்களின் காய்ந்த கிளைகள், சருகுகள் இருந்ததால் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. இதனால் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட வேண்டியிருந்தது.
மர்ம நபர்கள் வேண்டுமென்றே தீ வைத்தனரா? அல்லது, யாரேனும் சிகரெட் பிடித்து போட்டுவிட்டு போயிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.