ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் புதுமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன். ஆட்டோ டிரைவரான இவர் தனது தங்கையுடன் ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரி (பி.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வருகிறார்) இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த, இவர்கள் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாகவும், பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் நெருங்கியும் பழகியுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரிக்கு வந்த மகேஸ்வரியை இளந்தமிழன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்து உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் முடித்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு மணமாலைகளுடன் பெற்றோர்களுக்கு பயந்து காதல் ஜோடியான புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர் வர மறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.