முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (16.09.2022) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நேற்றைய தினம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையற் கூடத்திiனை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உணவு தயாரிக்கும் முறை, உணவின் தரம், சரியான நேரத்திற்கு உணவினை பள்ளிகளுக்கு கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்தான உணவினை வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவினை சாப்பிட்டார். மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து சிறப்பான முறையில் உணவினை வழங்கவும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு) மற்றும் (வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் ஆதி திராவிட நல துவக்கப்பள்ளி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 464 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மேற்கண்ட தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை கோதுமை ரவா மற்றும் காய்கறி கிச்சடி, புதன் கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி மற்றும் ரவா கேசரி ஆகிய உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று அரசு அனுமதித்த பிற சிற்றுண்டி உணவுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் எஸ்.சுமதி, நகர்மன்ற துணைத்தலைவர் வி.கருணாநிதி, ஒன்றியக்குழு தலைவர் என்.ரவி சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சு.ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் அம்பிகாபதி, ராஜமாணிக்கம், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.