ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வருபவர் தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுபா இளவரசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காரில் சென்றபோது ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாலையில் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழர் நீதிக் கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களாக எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.