அரியலூர் அருகே ஒன்றிய கவுன்சிலர் அணிந்திருந்த தாலிச் செயின் திருட்டு

அரியலூர் அருகே ஒன்றிய கவுன்சிலர் அணிந்திருந்த தாலிச் செயின் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-04-01 14:53 GMT

கொள்ளை நடந்த ஒன்றிய கவுன்சிலரின் வீடு.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிட நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் புகழேந்திசுரேஷ். இவர் ராங்கியம் பகுதி பா.ம.க. ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் புகழேந்தியும் அவரது கணவர் சுரேஷும் வீட்டின் முன் பக்கத்தில் உள்ள அறையில் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த மற்றொரு அறைக்குள் புகுந்த திருடர்கள் அங்கு இருந்த பீரோவில் ரொக்கப் பணம் ரூ. 3 லட்சத்து 90 ஆயிரத்தை கைப்பையில் இருந்த வங்கி பாஸ்புக், காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களோடு சேர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். தூங்கி கொண்டிருந்த அறைக்குள் வந்த திருடர்கள் புகழேந்தியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை அறுத்துள்ளனர். தாலிச் சங்கிலியை அறுக்கும் பொழுது விழித்துக்கொண்ட புகழேந்தி சத்தம் போட்டவுடன் திருடர்கள் பின்பக்கத்தில் தோட்டம் வழியாக தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

அதுபோலவே அருகிலுள்ள கருக்கை கிராமத்தில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி சந்திரா வீட்டில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் நகைகளையும் 6 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்பநாய் டிக்ஸி மூலம் தேடி வருகின்றனர்.அடுத்த டுத்து இரண்டு கிராமங்களில் நடந்த திருட்டு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News