அரியலூர்: ஸ்ரீபுரந்தானில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-24 07:48 GMT

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன் தலைமையில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பெயரளவுக்கு பணிகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் இவ்வூராட்சிக்கு பணிகள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்றத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான உலகநாதன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் ஸ்ரீபுரந்தானில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் வழங்க உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்றும் அதுவரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தினால் அரியலூர்- கும்பகோணம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News