ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் முற்றுகை போராட்டம்
தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்;
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தா பழூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு காமராஜ் நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீரானது சரியாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தா பழூர் கடைவீதியில் ஊர்வலமாக வந்து தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.