சாலைப்பணியாளர்களுக்கு புதிய உபகரணங்கள் வழங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
சாலைப்பணியாளர்களுக்கு புதிய உபகரணங்களை வழங்க வேண்டும் என 8 வது வட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 8 வட்டப்பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் கண்ணன், வட்ட இணைச் செயலாளர் ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். வட்டச் செயலாளர் பைரவன், வட்ட பொருளாளர் மேகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பயன் வழங்கிட வேண்டும். இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியினை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இரண்டு சாலைப் பணியாளர்களுக்கு 8 கி.மீட்டர் வீதம் சாலை ஒதுக்கீடு செய்து பணியமர்த்த வேண்டும். முதுநிலைப் பட்டியலிலுள்ள தகுதியான சாலைப் பணியாளர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு புதிய மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.