ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிமடம் அடுத்த திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடையின் முழு கொள்ளளவை தாண்டி மழைநீர் அதிகமாக சென்றதால் திருகளப்பூர் - இறவாங்குடி சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன்காரணமாக சிறுபாலத்தின் பக்கவாட்டில் மண்அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், சிவாஜி, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலரும் உடனிருந்தனர்.