அரியலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

அரியலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350கிலோ ரேஷன் அரிசி மற்றும் 20,000கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-10-09 08:20 GMT

ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் புழுங்கல் மற்றும் பச்சரிசியை குடும்ப அட்டைதாரர்கள் பலர் வாங்குவது இல்லை. இதற்கு காரணம் ரேஷன் அரிசியில் வீசும் ஒரு வித நாற்றமே ஆகும். இப்படி வாங்காமல் செல்பவர்களுக்கு ஒதுக்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களின் ஒத்துழைப்புடன் மூட்டை மூட்டையாக வெளியில் கடத்தி சென்று அரிசி ஆலைகளில் அதனை பாலீஷ் தீட்டி கேரளாவில் விற்று விடுகிறார்கள். தமிழக ரேஷன் அரிசிக்கு  கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும்  ரேஷன் அரிசியை மாவாக்கி ஓட்டல்கள் மற்றும் டிபன் கடைகளிலும் இட்லி தோசைக்கு பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான இரவு நேர டிபன் கடைகளில் முழுக்க முழுக்க  ரேஷன் அரிசி தான் இட்லி தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா இலையூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர், அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் இலையூர் கிராமத்திற்கு சென்றனர். இலையூர் கிராமம் சாமிதுரை மகன் சண்முகம் என்பவரின் ஷெட்டில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கு 1350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 20,000 கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் சண்முகம் என்பவரை கைது செய்து, ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் இலையூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி மற்றும் பொது விநியோகத் திட்ட உடைக்கப்பட்ட அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக பொது விநியோகதிட்ட திட்ட ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News