தா.பழூரில் மழைமானி அமைக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தா.பழூரில் மழைமானி அமைக்கப்பட்டதால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்டா பாசன பகுதியாக விளங்கும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில், 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர மானாவாரி நிலங்களில் நிலக்கடலை,எள், மக்காச்சோளம், முருங்கை,பருத்தி, பந்தல் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அந்தந்த பருவகாலத்திற்கும், மழை பொழிவை பொருத்தும் பயிரிட்டு வேளாண்மை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும் பெய்யும் மழையளவு பதிவு செய்யப்படும்போது, விவசாயிகளுக்கு பல்வேறு விதங்களில் அது மிகவும் உதவிகரமாக இருக்கும். அந்தந்த மாதத்தின் முந்தைய சராசரி மழையளவு விவசாயிகளுக்கு தெரியும் பட்சத்தில், தங்களை அதற்கு தயார் படுத்திக் கொள்வதற்கு, விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும்.
தற்போது மாவட்ட தலைநகரமான அரியலூர், தாலுகா தலைநகரங்களான செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் மற்றும் திருமானூர் பகுதியிலும் மழைமானி ஏற்கனவே உள்ளது. தா.பழூரில் ஒரு மழைமானி அமைப்பது அவசியமாகும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, ஆட்சியர் ரமண சரஸ்வதி, மழைமானி அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழைமானி பொருத்தப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன், மழைமானியை அதற்கான இடத்தில் பொருத்தி தொடங்கி வைத்தார். ஒன்றியக் குழு துணை தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன், ஒன்றிய பொறியாளர்கள் ரேவதி, சரோஜினி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.