மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம்
சோழமாதேவியில் களிமண் எடுப்பதற்கு அனுமதி தரக்கோரி மண்பாண்ட தொழிலா ளர்கள் மண்பானையை சுமந்து வந்து மனு அளித்தனர்;
மண் எடுக்க அனுமதிக்கக்கோரி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வசிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டங்களைச் சுமந்து வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவி கிராமத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 தலைமுறைக்கும் மேலாக மண்பாண்ட தொழில் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்பாண்டத் தொழில் செய்வதற்கு அருகில் உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் களிமண் எடுத்து வந்தனர்.தற்போது, அரசு அனுமதி மறுத்துள்ளதால் , களிமணல் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிக்க முடியாமல் தொழிலாளர்கள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். களிமண் எடுப்பதற்கு அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு முறைப்படி பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய அனுமதி கிடைக்கவில்லை.
இதனால். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. தங்களது நிலை குறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் விடிவு பிறக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மண்பாண்டத் தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மண்பாண்ட தொழிலாளர்கள், தங்களது வீட்டின் முன்பு மண்பானையை கையில் வைத்துக்கொண்டு அறவழிப் போராட்டம் நடத்தினர். அப்போது, களிமண் அள்ளுவதற்கு அரசு அனுமதி தர வேண்டும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷிடம், களிமண் அள்ளுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.