பன்றிகள் கடத்தல்..! ஜெயங்கொண்டம் அருகே மர்ம நபர்கள் கைவரிசை
11 சினை பன்றிகளும், 2 கடா பன்றிகளும், நான்கு குட்டி பன்றிகளும் என பன்றிகளின் மதிப்பு சுமார் 2.1/2 லட்சம் இருக்குமென அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.;
ஜெயங்கொண்டம்-தாபழூர் அருகே அருள்மொழி கிராமத்தில் ரூபாய் 2 1/2 லட்சம் மதிப்பிலான பன்றிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது சகோதரர் மணி. இவர்கள் நான்கு தலைமுறைகளாக பன்றிகள் வளர்த்து பராமரித்து வருகின்றனர். இதனையே குலத்தொழிலாக செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் வைத்திருப்பதால், பன்றிகளை சிறிது நாட்கள் ஏரிக்கரைகளில் வைத்து பராமரிக்குமாறு, அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து ராமசாமியும், மணியும் சேர்ந்து ஏரிக்கரையில் 2 கொட்டகைகள் அமைத்து அதில் பன்றிகளை பராமரித்து வந்துள்ளனர்.
வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு பன்றிகளை திறந்து விட்டு மாலை 6 மணிக்கே அடைத்து விடுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணி அளவில் பன்றிகளை திறக்க சென்றபோது, இரண்டு கொட்டகைகளிலும் இருந்த பன்றிகள் அனைத்தும் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி மற்றும் மணி இருவரும் அக்கம் பக்கத்தில் எங்கு விசாரித்தும், பன்றிகள் காணாததால் அதிர்ச்சி அடைந்து மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன பன்றிகளையும், திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். பன்றிகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 11 சினை பன்றிகளும், 2 கடா பன்றிகளும், நான்கு குட்டி பன்றிகளும் என பன்றிகளின் மதிப்பு சுமார் 2.1/2 லட்சம் இருக்குமென அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.