ஜெயங்கொண்டம் தானியங்கள் விற்பனை நிலைய கட்டிடங்கள் திறப்பு
ஜெயங்கொண்டம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மைய வளாகத்தில் ரூ.75லட்சம் மதிப்பில் தானியங்கள் விற்பனைநிலைய கட்டிடங்கள் திறப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மைய வளாகத்தில், பெரம்பலூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தலா ரூ.75 லட்சம் மதிப்பில் 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 தானியங்கள் விற்பனை நிலைய கட்டிடங்களை (பரிவர்த்தனைக் கூடங்கள்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.
இதையடுத்து, மேற்கண்ட 2 கட்டிடங்களையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஜெயக்குமார், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் சிங்காரம், அரியலூர் மாவட்ட வேளாண் அலுவலர் கார்த்திக், ஜெயங்கொண்டம் வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், வேளாண் விற்பனைக்குழு மேற்பார்வையாளர் அழகுதுரை, ஆண்டிமடம் வட்டார உதவி வேளாண் அலுவலர் சசிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இறவாங்குடி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மாதாபுரத்தில் 15-வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணருடன் அமைக்கப்பட்ட புதிய மோட்டார் அறை, முருகன்கோட்டையில் 14-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.9.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறுடன் சிமென்ட் தண்ணீர் தொட்டி ஆகியவற்றை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் லதா கண்ணன், ஊராட்சி தலைவர் வளர்மதி பாலமுருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.