சதுரங்கபோட்டி நடத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் சதுரங்க போட்டி நடத்துவது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.;
சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை மாவட்டங்களில் பிரபலப்படுத்தும் வகையில் சதுரங்க போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, மாரத்தான், இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவில் முகாம் நடத்தி அம்மாணவர்களை சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சதுரங்க போட்டிகளை நடத்தும் வகையில் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன் துவக்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி (அரியலூர்), ஜோதிமணி (உடையார்பாளையம்), பேபி (செந்துறை) ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.
மேலும், இப்பயிற்சி வகுப்பில் சதுரங்க விளையாட்டு பயிற்றுநர் கலந்து கொண்டு சதுரங்க விளையாட்டு குறித்தும், விதிமுறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பயிற்சியில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இப்பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் செய்திருந்தார்.