மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது
மன வளர்ச்சி குன்றிய பெண்ணை சிக்கன் பக்கோடா வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள செட்டி திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சேப்பெருமாள் என்கிற ராஜமாணிக்கம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை வீட்டில் பெற்றோர்கள் யாரும் இல்லாத போது அப்பகுதியில் உள்ள பெரிய ஏரி கரைக்கு அழைத்துச் சென்று கோழி பக்கோடா (சிக்கன் பக்கோடா) வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்தார்.இதனால் பரிமளா வயிறு பெரிதாகி உள்ளதாகவும் அவருக்கு மண் திண்ணும் பழக்கம் இருப்பதால், இதனை பார்த்த அவரது வீட்டார்கள் மண் தின்பதால் வயிறு பெரிதாக இருக்கும் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.
மேலும் இது குறித்து அப்பகுதியில் பரிமளாவும், சேப்பெருமாள் ஆகிய இருவரும் அடிக்கடி சந்திப்பதை பார்த்து சிலர் வீட்டில் கூறியுள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் பரிமளாவை விசாரித்த போது தன்னை சிக்கன் பக்கோடா வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் நடந்ததை கூறியுள்ளார்.
இந்நிலையில் பரிமளாவை டாக்டரிடம் காண்பித்த போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரிமளாவின் தாயார் சாந்தி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.