அரியலூர்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-08 16:27 GMT

அரியலூர் மாவட்டம் பொன்னேரியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் 2477 குளம் மற்றும் ஏரிகளில் 37 குளம் மற்றும் ஏரி முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 736 குளம் மற்றும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் நீர் நிரம்பியுள்ளன. 1276 குளம் மற்றும் ஏரிகளில் 50 சதவீதத்திற்கு மேல் நீர் நிரம்பியுள்ளன. தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் தொடர்புடையத்துறை அலுவலர்கள் மூலமாக குளங்கள் மற்றும் ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை குருவாலப்பர்கோவில் கிராமத்தில் பொதுப்பணித்துறை நீர்வளஆதாரத்துறை மருதையாறு வடிநிலக்கோட்டம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பொன்னேரியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னேரியின் மூலம் பிச்சனூர், குருவாலப்பர்கோவில், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, ஆயுதகளம் உள்ளிட்ட அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 1374 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதன் முழு கொள்ளளவும் 114.46 மி.கனஅடியாகும். நீர்மட்ட அளவு 17 அடியாகும்.

தற்பொழுது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 16 அடி அளவில் நீர் தேக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால் ஏரி முழுகொள்ளளவு எட்டும் பட்சத்தில், அதன் உபரிநீர் வளவன் ஏரி மூலமாக வடவாற்றில் விடப்படும். பொன்னேரியின் வெள்ள நீர்போக்கியின் மூலமாக 9000 கனஅடி அளவு நீர் வெளியேற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டாம் பாசன மதகு மராமத்துப்பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பணிகளை விரைந்து முடித்து, பணி நடைபெற்ற கரைகளில் தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மூலம் கரையின் உறுதித்தன்மையினை உறுதிசெய்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தை முன்னிட்டு பொன்னேரியின் கரைகள் மற்றும் உபரிநீர் போக்கி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஏரியின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டி சந்தை பகுதியில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் காரணமாக மழைநீர் வெளியேற போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி இருப்பதை நடந்து சென்று பார்வையிட்ட பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூராக உள்ள மழைநீரினை போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாத வகையில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலை விரிவாக்கப் பணியில் நிலம் கையப்படுத்தும் பணியினை முழுமையாக மேற்கொண்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகளையும்  முழுமையாக மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News