பஸ்கள் வராததால் தா.பழூரில் மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

தா. பழூரில் பேருந்து வராததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-08 09:59 GMT

பேருந்து வராததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் தா பழூரில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்பிற்காக  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லவேண்டியுள்ளது. இதற்காக மாணவர்கள் காலை 7 மணி முதல் பேருந்துக்காக காத்து நிற்கின்றனர். ஆனால் 9 மணி வரை பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை அன்றாடம் ஏற்படுகிறது.

மேலும் கும்பகோணம் பகுதிக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்காக செல்லும் பொதுமக்களும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல வேண்டிய பொதுமக்களும் காலை முதல் பேருந்துக்காக காத்து கிடக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு பேருந்துகள் பற்றாக்குறை இன்றி சென்று கொண்டிருந்தன. ஆனால் தற்பொழுது ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவது குறைந்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். 

காலை 7 மணி முதல் 9 மணி வரை பேருந்துகள் அதிகப்படியாக இயக்கப்பட்டு வந்திருந்தன. தற்போது அவை நிறுத்தப்பட்டு உள்ளதால் பள்ளி கல்லூரி செல்வது சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் பேருந்து நிறுத்தம் அருகே லாரி கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாணவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட வழியில்லாமல் சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்துக்காக காத்து கிடந்து கல்லூரி செல்வதே போராட்டமான வாழ்க்கையாக மாறி வருகிறது என மாணவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்‌‌.

இந்நிலையில் பேருந்து வராததால் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். கல்லூரி செல்வதற்கு காலை வேளையில் தட்டுப்பாடின்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்போது  மாணவர்கள் கோரிக்கை  வைத்தனர்.

Tags:    

Similar News