ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு
ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய பேருந்து நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், அதன் அருகில் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்தின் வரைபடத்தின் மூலம் பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
இதனையடுத்து பேருந்து பயணிகள் பயன்படுத்தக்கூடிய கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்படாதது குறித்து கேட்டறிந்த அமைச்சர் சிவசங்கர், பயணிகள் பயன்பெறும் வகையில் இவ்வகையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். இதற்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பயணிகள் தங்குவதற்கான போதிய இடவசதி இல்லாததால், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின்போது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.