ஜெயங்கொண்டம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டி நூதன போராட்டம் நடத்தினார்கள்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. வடக்கு தெருவில் உள்ள தார்சாலை தொடர் கனமழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சேறாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த சாலையில் காய்கறி உள்ளிட்ட வியாபாரிகள் யாரும் உள்ளே வருவதில்லை, அவசரத்திற்காக இருசக்கர வாகனங்களில் செல்ல முடிவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து சாலையை உள்ள சேறு சகதிகளை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.