சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் இன்று (03.01.2022) முதல் பதினைந்து முதல் பதினெட்டு வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 15-18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன், டாக்டர் உமா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாம்கர்ணல் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜகுமார் கலந்து கொண்டனர்.