ஜெயங்கொண்டம் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க எம்எல்ஏ வேண்டுகோள்
ஜெயங்கொண்டம் நகருக்கு புறவழிச் சாலை அமைக்க எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வேண்டுகோள்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்விநேரத்தில் பேசிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்கின்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஜெயங்கொண்டத்திற்கு தென்புறம் திருச்சி-சிதம்பரம் சாலையில் ஏற்கனவே புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோன்று விருத்தாசலம் -கும்பகோணம் சாலையில்,மகிமைபுரம்-சின்னவளையம் வரை TNRSP phase-II-ல் ஏற்கனவே திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மகிமைபுரத்திலிருந்து சின்னவளையம் வரை 4.5 கி.மீ தூரத்தில் புறவழிச் சாலை அமைத்து தர அமைச்சர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், புறவழிச் சாலைக்கு TNRSP, phase-II மூலமாக பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். எனவே அதையும் நான் கருத்தில் எடுத்துக்கொண்டு, சம்மந்தப்பட்ட பொறியாளர்களை அழைத்து, இப்பணிக்கு முன்னுரிமை அளித்து உடனேயே புறவழிச் சாலை அமைக்க வேண்டுமென்று அரசின் சார்பாக நான் ஆணையிடுவேன் என்று தெரிவித்தார்.