முந்திரி தொழிற்சாலை அமைக்க ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கோரிக்கை
அரசு சார்பில் எந்த தொழிற்சாலையும் இல்லாத ஜெயங்கொண்டம் தொகுதியில், முந்திரி தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் -எம்எல்ஏ கோரிக்கை;
தமிழக சட்டசபையில் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ.க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய தாலுகாக்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுடைய வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் முந்திரி அறுவடை செய்யப்படுகிறது. முந்திரிக்கு ஏற்கெனவே நிரந்தர விலை இல்லை. விலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
எனவே, முந்திரி உடைப்பது, முந்திரி பழச்சாறு தயாரித்தல் மற்றும் முந்திரியை மதிப்புக்கூட்டி உணவுப் பொருட்களாகத் தயாரித்தால் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கலாம். வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதனால், அன்னிய செலாவணி மூலம் வருமானம் பெற முடியும். தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, முந்திரி விவசாயிகள் லாபம் பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே, அரசு சார்பில் எந்த தொழிற்சாலையும் இல்லாத ஜெயங்கொண்டம் தொகுதியில், முந்திரி தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்தபோது, அரியலூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தரத் தொழில் நிறுவனம் மற்றும் 23 குறு, சிறு முந்திரி பதப்படுத்தும் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருளான முந்திரிக் கொட்டைகள் பற்றாக்குறையாக உள்ளதால், இந்நிறுவனங்களுக்குத் தேவையான முந்திரிக்கொட்டைகள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே அப்பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.
இதையடுத்து எம்.எல்.ஏ. பேசுகையில், தனியார் தொழில் முனைவோர் முந்திரி தொழிற்சாலை தொடங்கினால், அதற்கு அரசு உதவி செய்வதற்கு முன்வருமா என்றார். அதற்கு அமைச்சர், தனியார் தொழில் முனைவோர் யாரேனும் தொழில் தொடங்குவதற்கு முன்வந்தால், இந்தத் துறையின் சார்பில் கடன் வசதி வழங்கி, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, அவர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.